வெள்ளி, 8 ஜனவரி, 2016

அதிசய ஆலயம் - நந்தி தீர்த்த க்ஷேத்ரம் - பெங்களூர் மல்லேஸ்வரம்

#1

#2
ழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம். தொன்னூறுகளின் தொடக்கத்தில் அங்கே வசித்த இருவருடங்களில் அநேகமாக எல்லாக் கோவில்களுக்குமே சென்றிருக்கிறோம்.  குறிப்பாக சம்பிகே ரோடுக்கு பேரலல் ஆக, பதிமூன்றாம் பதினைந்தாம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே அமைந்த தெருவை “கோவில் தெரு” என்றே அழைக்கிறார்கள். மல்லேஸ்வரத்தை விட்டு வேறு பகுதிக்கு வந்து விட்ட பின்னரும், இங்கே இருக்கும் காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி கோவில்களுக்கு அடிக்கடி செல்வது தொடர்ந்தது. இங்கிருக்கும் காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி கோவில்களுக்கு நேர் எதிரே வெற்று நிலமாக காட்சியளித்த இடத்தில் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது 1999ஆம் ஆண்டு, ஒரு நந்தீஸ்வரர் கோவில். 
#3

அடுக்குமாடி கட்டுவதற்காகத் தோண்டப்பட்டக் காலி நிலம் உள்ளே சதுசதுப்பாக இருக்க.. ஆச்சரியத்துடன் மேலும் தோண்டத் தோண்ட.. பரபரப்பு, பிரமிப்பு, விடுவிக்க முடியாத புதிர்களோடு வெளி வந்தது,தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி க்ஷேத்ரம்என்றழைக்கப்படும் இந்த ஆலயம்.

#4
சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த கோவிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும் சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன.


#5 சோலைக்கு நடுவே..

#6 சுற்றிவர அடுக்குமாடிக் கட்டிடங்கள்:

#7 
வெளிப்புற வாயில் உள்ளிருந்து பார்க்கையில்..
#8
உட்புறவாயில்
Carbon dating முறையில் கோவிலுக்கு ஏழாயிரம் வயது இருக்கலாமெனக் கருதுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.  பன்னெடுங்காலமாய் புதைந்து கிடந்திருந்தாலும் அழகு குன்றாமல் பொலிவுடன் திகழுகிறது. பழமை வாய்ந்த உறுதியான கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகான முற்றம். நடுவே படிக்கட்டுகளுடன் கல்யாணி தீர்த்தம். வழவழப்பான கருங்கல்லில் பொன் வண்ணத்தில் தீட்டப்பட்ட கண்களோடு வடிவாகச் செதுக்கப்பட்ட நந்தி. நந்திக்குச் சற்றே தாழ்ந்த நிலையில் அதே பளபளப்பான கருங்கல்லில் சிவலிங்கம். பார்ப்பவரை எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் கட்டமைப்புடன், நந்தியின் வாயிலிருந்து தெள்ளிய நீர் தொடர்ந்து சிவனில் மேல் விழுந்து அபிஷேகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தற்போது செம்பினால் ஆன பெரிய கொள்கலனில் இந்த நீர் விழுந்து, கீழுள்ள துளை வழியாக சிவனை அபிஷேகம் செய்வது போல் அமைத்துள்ளார்கள். இருபத்து நான்கு மணிநேர அபிஷேகத்தில் உளம் குளிந்து மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் சிவ பெருமான்!

#9


#10

சிவன் மேல் தொடர்ந்து விழுகின்ற நீர் படிக்கட்டுகள் வழியாகச் சென்று முற்றத்துக் குளத்தில் சேகரமாகிறது. குளத்தின் நடுப்பாகத்தில் 15 அடி ஆழம் கொண்ட நீர்ச்சுழல் ஒன்றும் உள்ளது. எங்கிருந்து நீர் வருகிறது, எவ்வண்ணம் அது நந்தியின் வாய்வழி சிவலிங்கத்தின் மேல் பொழிகிறது, எப்படிச் சுழல் உண்டாயிற்று, சுழல் வழியாக நீர் எங்கே செல்கிறது, வடிவமைத்த திறன்மிகு சிற்பி யார் என்பன யாவும் இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.

#11

கோவிலுக்கு சற்று தொலைவிலும் மேல் மட்டத்திலும் இருக்கும் சாங்கி ஏரியிலிருந்து நீர் வருகிறதோ எனும் அனுமானம் உறுதி செய்யப்படவில்லை. தொன்மையும் பாரம்பரியமும் வாய்ந்த கோவில் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

#12
நீர் கீழ் தளத்திலிருக்கும் சிவனை அடையும் வழியை இப்படத்தில் தெளிவாகக் காணலாம்:

வேண்டுகிற பக்தர்களுக்கு அபிஷேக நீர் பாட்டில்களில் சேகரித்துத் தரப்படுகிறது. இப்புனித நீரை அருந்துவதாலும் நோய் வாயப்பட்டவர் மேல் தெளிப்பதாலும் தீராத நோய்கள் தீருமென நம்பி நம்பி மக்கள் எடுத்துச் செல்கிறார்கள்.
#13



#14 அம்மை அப்பன்

 #15
அண்ணனும்..

தம்பியும்..
 #16


குளத்தில் ஆமைகள் பல நீந்தி விளையாடுகின்றன. பக்தர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நாணயங்களைக் குளத்தில் வீசிச் செல்வதும் நடக்கிறது.

#17
கல்யாணி தீர்த்தம்

#18 கோவில் ஆமை

#19 தீபச் சுடர்

#20 நம்பிக்கை

#21
பிரசாதம்


#22
ஓய்வு நேரத்தில்..



தரிசனம் முடித்து விட்டு அமைதியான அச்சூழலை இரசித்தபடி திரும்பிச் செல்ல மனமில்லாமல் படிக்கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து விடுகிறார்கள். குடும்பத்துடன், நண்பர்களுடன் வந்து பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

#23


#24
சிவனைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதலைச் சொல்லிச் செல்கிறார்கள்.


#25
நிஜமும் பிம்பமும்..

இருவேறு சமயங்களில் சென்று எடுத்த படங்கள் ஆகையால் நந்தியும் சிவனும் வேறுவேறு பூ அலங்காரங்களில் உங்களுக்குத் தரிசனம் தருகிறார்கள்.

#26
அபிஷேகப் பிரியர்

சிவனுக்கு அபிஷேகப் பிரியர் என்றுமொரு பெயர் உண்டு. அவரைக் குளிர்விக்கும் வகையில் தங்கு தடையற்ற அபிஷேகம் நடக்கிறது.


#27
செந்தூரப் பொட்டுடன்..


#28 
சிகப்பு ரோஜா மாலையுடன்..

கோவிலுக்குள் இருக்கும் இரு நந்திகளோடு, கோவிலின் வாயிலில் மற்றும் சுற்றுச் சுவர்களில் எங்கெங்கும் நந்தி தேவரே.

#25


# 29
பின் புறத் தோற்றம்

#30
சுற்றுச் சுவர் எங்கிலும்..


#31
உற்சவ மூர்த்தியுடன் உலாச் செல்லக் காத்திருக்கும் நந்தி..

#32
சிவன் சன்னதிக்கு வலப்பக்கம் வீற்றிருக்கும்  வலம்புரி விநாயகர்

இங்கு மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக பாலபிஷேகத்துடன் நடைபெறுகிறது.

பெங்களூர் வருகிறவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.

கோவில் நேரம்:
காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை.
மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.
**

5 ஏப்ரல் 2016 கல்கி தீபம் இதழிலும்..
http://tamilamudam.blogspot.com/2016/03/blog-post_22.html
நன்றி கல்கி தீபம்!

24 கருத்துகள்:

  1. சென்ற மாதம் உறவினர்களுடன் சென்று தரிசனம் செய்து வந்தோம். பலவருடங்களுக்கு முன்பு ஒருதடவை பார்த்து இருக்கிறோம். கோவில் தெரு அல்லவா வரிசையாக அத்தனை கோவில்களும் போய் வந்தோம்
    . அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற மாதம் வந்திருந்தீர்களா? ஆம், கோவில் தெருவுக்கு சென்றால் எல்லாத் தெய்வங்களையும் தரிசித்து வந்திடலாம். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. இந்த கோவிலுக்கு நாங்களும் சென்று தரிசித்திருக்கிறோம்..

    அழகான அருமையான படங்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. உள்ளூரிலேயே இருக்கிறேன் இந்தக்கோயில்பற்றி தெரியவே இல்லை ராமல்ஷ்மியின் பதிவில்
    அழகழகான படங்களுடன் அறிந்துகொண்டேன் விரைவில் செல்லவேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் சென்று வாருங்கள், ஷைலஜா. பக்கத்திலேயே தரிசிக்க வேண்டிய பல கோவில்கள் உள்ளன.

      நீக்கு
  4. Very Nice description with beautiful photos. During our next visit we will certainly make it.

    பதிலளிநீக்கு
  5. அதிசயத் தகவல்கள். அழகிய படங்கள். பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கோவிலையும் கோவில் வளாகத்தை மிக அருமையாகப் பராமரித்து வருகிறார்கள்.

      நீக்கு
  6. மிக அருமை. 5 வருஷம் பெங்களுர்ல இருந்தேன், மல்லேஸ்வரம் பக்கம் -ஹோட்டல்களும் அருமையா இருக்கும்னு என் தம்பி சொல்லியும் அந்த பக்கம் போனதில்லை.

    ஏழாயிரம் வருஷம் கொஞ்சம் ஓவரோ? எழுனூறுன்னு இருக்கணுமோ? கல்வெட்டு ஒன்னும் இல்லையா? தஞ்சை பெரிய கோவில் கட்டி ஆயிரம் வருஷம் ஆச்சு. ராஜேந்திர சோழன் தான் மேற்கு சாளுக்கியம்(கர்நாடகா) - மான்ய கேடயம் வரை படையெடுத்து வந்துள்ளார். நந்தி வாய் வழி நீர் வந்து சிவன் மீது விழுவது எல்லாம் வைத்து பாத்தால் அவரது தலைமை சிற்பி "நித்த வினோத பெருந்தச்சன்" கைங்கரியமா இருக்குமோ? சும்மா என் அனுமானம் தான்.
    எல்லாம் பாலகுமாரனின் "உடையார்" ஆறு பாகமும் உக்காந்து படிச்சதுனால வந்த கமண்ட் இது.
    தொடர்ச்சியாக சிவன் சம்பந்தப்பட்ட செய்திகளா படிக்க வாய்க்குது. எல்லாம் அந்த தென்னாடுடைய சிவன் செயல்.

    கி.முவில் பெங்களுர்ல குடியேறிய சைலஜா அக்காவே போகலைன்னதும் எனக்கு கொஞ்சம் நிம்மதி. :))

    இந்தியா விஜயத்தில் கண்டிப்பா இந்த கோவிலும் லிஸ்டுல சேர்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழாயிரம் என்பது அதிகமாகதான் தெரிகிறது. கோவிலின் வயதை carbon dating முறையில் நிர்ணயித்திருக்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். சத்ரபதி சிவாஜியின் தம்பி (அல்லது தளபதி?) இந்தப் பக்கம் படையெடுத்து வந்தபோது கட்டியதென்றும் ஒரு வாய்வழிப் பேச்சு நிலவுகிறது. உறுதியற்ற தகவல் என்பதால் பதிவில் சேர்க்கவில்லை.

      /தென்னாடுடைய சிவன்/ பக்கத்திலேயே சுயம்பு லிங்கமாக சிவன் காட்சி தரும் “காடு மல்லேஸ்வரர்” கோவிலும் உள்ளது. அதையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்:). ஷைலஜா கி.மு_வில் குடியேறினாரா:))?

      நீக்கு
  7. ஆஹா... அற்புதமான தரிசனம் அக்கா...
    என்ன அழகு படங்கள்...
    நந்தியின் வாயிலிருந்து நீர்....
    விவரங்களையும் படித்து அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. போக வேண்டுமென்ற ஆர்வத்தைத்தூண்டுகிறது பதிவும் படங்களும் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சாந்தி. அடுத்தமுறை பெங்களூர் வரும்போது அவசியம் போய்வாருங்கள்:).

      நீக்கு
  9. ஹைய்யோ! உங்க படங்களின் அழகு!!!!

    நானும் பயண அனுபவத்தில் இந்தக்கோவில் பற்றிஎழுதி இருந்தேன். அது 2014 வது வருசக்கடைசி. சின்ன நினைவூட்டல் உங்கள் வாசகர்களுக்கு:-)

    http://thulasidhalam.blogspot.com/2014/12/3.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமுறை சென்றிருந்தாலும் படங்கள் எடுக்கலாம் என்பதே உங்கள் மூலமாகதானே அறிய வந்தேன். சுட்டிக்கும், அதற்கும் சேர்த்து நன்றி:)!

      நீக்கு
  10. அருமையானதோர் கோவில் பற்றிய பகிர்வு. படங்கள் ஒவ்வொன்றும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மல்லேஸ்வரத்தில் பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம் தொண்ணூறுகளில். ஆனால் எந்தக் கோவிலின் பெயரும் சரியாகத் தெரிவதில்லை. கன்னடம் அறிந்த நண்பர்களுடன்சென்றால்தான் ஓரளவு தகவல்கள் தெரியும் மறுபடியும் போய்ப் பார்க்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தெருவில் அருகருகே நான்கு கோவில்கள் இருக்கின்றன. எட்டாவது க்ராஸிலும் பழமை வாய்ந்த கோவில்கள் சில இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள். நன்றி GMB sir.

      நீக்கு
  12. மிக அழகான படங்களுடன் அருமையான பகிர்வு ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin